தீ விபத்தில் 8 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

வளவனூர் அருகே தீ விபத்தில் 8 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
விழுப்புரம்:
வளவனூர் அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்த சுப்புராயன் (வயது 59), செங்கேணி மனைவி செல்வி (38), கண்ணப்பன் (60), சந்திரன் (28), ஜெயக்குமார் (30), பிரகாஷ் (37), சிவராஜ் மனைவி சுமதி (60), முருகவேல் மனைவி ராதா (38) உள்ளிட்ட 14 குடும்பத்தினர் அங்கு சாலையோரமாக உள்ள இடத்தில் 8 குடிசை வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் சுப்புராயனின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென எரிந்த தீ அருகில் இருந்த மற்ற 7 குடிசைகளுக்கும் பரவியது. இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.
ரூ.5 லட்சம் சேதம்
இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 8 குடிசை வீடுகளும் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.
இதில் வீடுகளில் இருந்த பீரோ, கட்டில், துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலானது. இதன் சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆறுதல்
இதனிடையே தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், இளங்காடு கிராமத்திற்கு நேரில் சென்று அங்கு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். அப்போது கோலியனூர் ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், வளவனூர் நகர செயலாளர் ஜீவா மற்றும் பலர் உடனிருந்தனர்.






