வெறிநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் செத்தன
அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி தேவம்பாளையத்தை சேர்ந்தவர் பாலு. இவர் தனது தோட்டத்தில் 20-க்கு மேற்பட்ட ஆடுகளை பட்டி அமைத்து வளர்த்து வருகிறார். அந்த ஆடுகளை பகலில் தோட்டத்து பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு இரவு அங்குள்ள கொட்டகையில் கட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தோட்டத்தில் ஆடுகளை மேய்த்து விட்டு, பின்னர் மாலையில் பட்டியில் அடைத்து வைத்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் நேற்று காலை பட்டிக்கு சென்றபோது அங்கு 8 ஆடுகள் செத்துக்கிடந்தன. சில ஆடுகள் காயத்துடன் போராடியது.
இது குறித்து விவசாயி பாலு கூறும்ேபாது " பட்டிக்குள் 10-க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியதில் 8 ஆடுகள் செத்து விட்டது. ஊருக்குள் தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் ஆடுகளை பத்திரமாக கொட்டைக்குள் கட்டி வைத்திருந்தோம். ஆனாலும் பட்டிக்குள் தெருநாய்கள் உள்ளே நுழைந்து ஆடுகளின் கழுத்தைப்பிடித்து கடித்ததால் அந்த ஆடுகள் சத்தம் போட முடியாமல் செத்துள்ளன. மேலும் கடித்து காயம் பட்ட 4 ஆடுகளுக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வருமானத்திற்காக ஆடுகள் வளர்த்து வந்த நிலையில் இவ்வாறு தெரு நாய்கள் ஆடுகளைகடித்துக் கொன்றது மிகவும் வேதனையாக உள்ளது. எனவே வெறிநாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன் செத்துப்போன ஆடுகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்" என்றார்.