அல்லேரி மலையில் 8 கிலோமீட்டர் நடந்து சென்று கலெக்டர் ஆய்வு..!


அல்லேரி மலையில் 8 கிலோமீட்டர் நடந்து சென்று கலெக்டர் ஆய்வு..!
x

அல்லேரி மலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நடந்து சென்று ஆய்வு செய்தார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட பீஞ்சமந்தை மலை ஊராட்சி, அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை மற்றும் ஆட்டுகொந்தரை மலை கிராமங்களில் 1½ வயது சிறுமி தனுஷ்கா மற்றும் சங்கர் ஆகியோர் பாம்பு கடித்து உயிரிழந்தனர். இதையடுத்து அல்லேரிமலைக்கு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

முதல்கட்டமாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 3.2 எக்டர் நிலத்திற்கு 6.4 எக்டர் அளவான மாற்று இடத்தை வருவாய் துறை மூலம் அல்லேரி மலையில் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது. வருவாய் துறை சார்பில் வழங்கப்பட்ட அந்த இடம் எங்களுக்கு வேண்டாம். தற்போது வழங்கப்பட்டுள்ள இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதனை நாங்கள் எளிதில் பயன்படுத்த முடியாது. எனவே பேரணாம்பட்டு அல்லது வேலூர் சரகத்திற்குட்பட்ட எல்லையில் சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக்கூறினர்.

இதையடுத்து வனத்துறையினருக்கு இடம் வழங்க, வருவாய்த் துறையினர் வேலூர் காகிதபட்டறை பகுதியில் உள்ள மலையை தேர்வு செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வருவாய்த் துறையினருடன், வனத்துறையினர் இணைந்து காகிதப்பட்டறை மலையில் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் வனத்துறைக்கு இடம் அளந்து வழங்கப்பட்டுள்ள நிலையில், அல்லேரி மலையில் சாலை அமைக்கப்பட உள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று நடந்து சென்று ஆய்வு செய்தார். வரதலம்பட்டு மலை கிராம அடிவாரத்தில் இருந்து, 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்லேரி மலை உச்சிக்கு கலெக்டர் நடந்து சென்று, எந்த இடத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். சாலையை அடித்து செல்லாத வகையில் மழை நீரை எவ்வாறு அப்புறப்படுத்துவது, வளைவுகளில் வாகனங்கள் திரும்பும் அளவிற்கு இட வசதி உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், பாம்பு கடித்து பலியான சங்கரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அல்லேரி மலை வாழ் மக்களுக்கு குடியிருப்புகள் கட்டப்படும். ஏற்கனவே ரூ.5.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் நிதி தேவைப்படும். புதிய ஆம்புலன்ஸ் சேவை விரைவில் மலைவாழ் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறினார்.


Next Story