ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சம் மோசடி
இரவுக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற தகவலுடன் வாட்ஸ்-அப்பில் வந்த லிங்கை அழுத்தியதால் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
இரவுக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற தகவலுடன் வாட்ஸ்-அப்பில் வந்த லிங்கை அழுத்தியதால் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்
கோவை கவுண்டம்பாளையம் அருகே ஜி.என்.மில்லை சேர்ந்தவர் நடராஜன் (வயது 83). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரு டைய வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது.
அதில், இன்று இரவுக்குள் நீங்கள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும், மேலும் மின் கட்டணத்தை செலுத்த கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யவும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
வங்கி கணக்கு ஆய்வு
இதனால் பதற்றம் அடைந்த நடராஜன், உடனடியாக அந்த லிங்கை கிளிக் செய்து, தனது வங்கி எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்தார். பின்னர் அதில் குறிப்பிடப்பட்டு இருந்த கணக்கிற்கு ரூ.10 மட்டும் செலுத்தினார்.
இதற்கிடையே அவருக்கு அந்த குறுந்தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் உடனடியாக அங்குள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்று தனது வங்கி கணக்கை ஆய்வு செய்தார்.
மோசடி
அப்போது அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சத்து 7 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, செல்போனில் வாட்ஸ்-அப் எண்ணிற்கு வரும் லிங்க் மூலம் பணம் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
யாரையும் நேரில் பார்க்காமல் ஆன்லைனில் பொருட்களை வாங்க பணம் செலுத்த கூடாது. இது போன்ற முறைகளில் அதிக மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது என்றனர்.