8 லிட்டர் கலப்பட தேன் அழிப்பு
8 லிட்டர் கலப்பட தேன் அழித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குன்னூர், பர்லியார், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தேன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிலர் மோட்டார் சைக்கிளில் தேன்கூட்டுடன் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். அதில் கலப்பட தேன் விற்பனை செய்வதால், அதனை வாங்கி செல்லும் சுற்றுலா பயணிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகினர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் நேற்று பர்லியார் பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீரென சோதனை நடத்தினார். அப்போது சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளில் தேன் விற்ற 2 பேர் கலப்பட தேன் விற்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 8 லிட்டர் கலப்பட தேன், கீழே கொட்டி அழிக்கப்பட்டது. கலப்பட தேன் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரித்து அனுப்பினார்.