7 ஆயுள் தண்டனை கைதிகள் உள்பட 8 பேர் விடுதலை


வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் இருந்து 7 ஆயுள் தண்டனை கைதிகள் உள்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

வேலூர்

வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் இருந்து 7 ஆயுள் தண்டனை கைதிகள் உள்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

மனிதாபிமான அடிப்படையில்

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரையின் 113-வது பிறந்தநாள் விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனையொட்டி நீண்டகாலம் ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து, முன் விடுதலை செய்ய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

விடுதலை செய்யும் கைதிகள் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்களாகவும், அவர்களின் நடவடிக்கைகள் திருப்திகரமாகவும் இருக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல், முறைகேடு, வழிப்பறி, மோசடி, பயங்கரவாத குற்றங்கள், மாநிலத்துக்கு எதிரான குற்றம், பெண்களுக்கு எதிரான குற்றம், சாதி மற்றும் மதரீதியான வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு முன்விடுதலை அளிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

8 கைதிகள் விடுதலை

இதையடுத்து மாவட்ட அளவில் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் விடுதலை செய்யும் கைதிகளை ஆய்வு செய்து, பெயர் பட்டியலை மாநில அளவிலான குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்படி வேலூர் மத்திய ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் 47 கைதிகளை விடுதலை செய்ய பரிந்துரைக்குழு முடிவு செய்தது. முதற்கட்டமாக வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் இருந்து 5 ஆயுள் தண்டனை கைதிகள் கடந்த 15-ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 2-ம் கட்டமாக ஜெயிலில் இருந்து 8 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை கைதிகள் ஆவர். 7 பேரும் அண்ணா பிறந்தநாளையொட்டி முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதைத்தவிர 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி தண்டனை குறைப்பின் கீழ் ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். 8 பேரிடமும் சிறைத்துறை அதிகாரிகள் உறுதிமொழி பத்திரம் பெற்று அனுப்பி வைத்தனர்.

மளிகை பொருட்கள்

அவர்களுக்கு தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் சார்பில் உழவுத்தொழில் செய்வதற்கான மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட பொருட்கள், 25 கிலோ அரிசி மற்றும் 21 வகையான மளிகை பொருட்களை சங்க செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், துணைத்தலைவர் விஜயராகவன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.

அப்போது வேலூர் சரக ஜெயில் டி.ஐ.ஜி. செந்தாமரைகண்ணன், மத்திய ஆண்கள் ஜெயில் சூப்பிரண்டு அப்துல்காதர் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story