பள்ளி கட்டிடத்தை சேதப்படுத்திய கடலூர் வாலிபர் உள்பட 8 பேர் கைது


பள்ளி கட்டிடத்தை சேதப்படுத்திய கடலூர் வாலிபர் உள்பட 8 பேர் கைது
x

கனியாமூர் கலவரத்தில் பள்ளி கட்டிடத்தை சேதப்படுத்திய கடலூர் வாலிபர் உள்பட 8 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

வன்முறை

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மசாவை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த வன்முறை குறித்து சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி சாவு மற்றும் வன்முறை தொடர்பாக நேற்று முன்தினம் வரை 308 பேரை போலீசார் கைது செய்தனர்.

8 வாலிபர்கள் கைது

மேலும் வீடியோ பதிவுகள், புகைப்படம் மற்றும் போராட்டக்காரர்கள் விட்டு சென்ற வாகனங்களின் பதிவு எண்கள் ஆகியவற்றை வைத்து வன்முறை சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று வீடியோ ஆதாரம் மூலம் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் மகன் ராஜ்குமார்(வயது 24), ரவி மகன் கார்த்தி(25), கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெருவை சேர்ந்த அருண்குமார்(20), கலைவாணன் மகன் கமல்ராஜ்(21), மோகன் மகன் ஸ்ரீதர்(20), சின்னசேலம் ஏர்வாய்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சத்தியமூர்த்தி(22), கடலூர் மாவட்டம் அன்னவல்லி மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் பாலமூர்த்தி(22), பள்ளி கட்டிடத்தை சேதப்படுத்திய கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த இளங்கோ மகன் மனீஷ்(26) ஆகிய 8 பேரையும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இவர்களையும் சேர்த்து மாணவிசாவு மற்றும் வன்முறை சம்பவத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து வன்முறை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story