மது விற்ற 8 பேர் கைது
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மது விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 பேர் கைது
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுவை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மதுவிலக்கு சப்- இன்ஸ்பெக்டர் அழகுராம் தலைமையிலான போலீசார் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். இதில் மதுவை பதுக்கி வைத்து விற்றதாக முருகன் (வயது 42), குழந்தைவேல் (60), பெரியக்காள் (64), கணபதி (42) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 24 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள நடுப்பட்டி மற்றும் கணேசபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மது விற்ற பணிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 45), கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி (60) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 6 மதுபாட்டில் வீதம் 12 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நொய்யல்
இதேபோல் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் புகழூர் அருகே மூலிமங்கலம் பிரிவு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு ராமநாதபுரம் மாவட்டம் கொச்சியார் கோவில் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவர் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தோகைமலை
தோகைமலை அருேக உள்ள போத்துராவுத்தன் பட்டியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் குமார் (46) என்பவர் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவர்மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்றதாக 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 41 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.