முன்விரோத தகராறில் 8 பேர் கைது
விழுப்புரம் அருகே முன்விரோத தகராறில் 8 பேர் கைது
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் மனைவி வெள்ளச்சி (வயது 60). இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் அருள்முருகன் (43). இவர்கள் வீடுகளுக்கு இடையில் உள்ள 3 அடி பொது சந்து யாருக்கு சொந்தம் என இரு தரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் திட்டி தாக்கிக்கொண்டனர். இதில் இருதரப்பையும் சேர்ந்த கோபி (36), அவரது தம்பி கார்த்திக் (31), கோபி மனைவி சுடர்மணி (30) மற்றும் அருள்முருகன், அவரது மகன் சந்துரு (17), மகள் ரக்சனா (18) ஆகியோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். வெள்ளச்சி கொடுத்த புகாரின்பேரில் அருள்முருகன், அவரது மகன்கள் வீரா (19), தமிழ்செல்வன் (24), தமிழரசன் (21) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அதேபோல் அருள்முருகன் அளித்த புகாரின்பேரில் அதே பகுதியை சேர்ந்த கோபி, கார்த்திக், விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்த விஜயரங்கன் (30), நன்னாடு சுரேஷ் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.