அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதி 8 பேர் சாவு


அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதி 8 பேர் சாவு
x

செங்கம் அருகே அரசு பஸ்- கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கம் அருகே அரசு பஸ்- கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 11 பேர் நேற்று முன்தினம் ஆயுத பூஜை விடுமுறையையொட்டி புதுச்சேரிக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் அருகே மேல்செங்கம் அடுத்த கருமாங்குளம் பகுதியில் அவர்களது கார் இரவு 9.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது.

அப்போது பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ்சும்- இவர்களது காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் முன் பகுதி முழுவதும் பஸ்சில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் இருந்த தொழிலாளர்கள் மரண ஓலம் எழுப்பினர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மேல்செங்கம் போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

8 பேர் பலி

அவர்கள் கடப்பாரை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு காரின் முன் பகுதியை உடைத்து அதில் சிக்கியிருந்த நபர்களை மீட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் இறந்து விட்டனர்.

காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மற்றவர்களை போலீசார் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்தவர்களின் பெயர்கள் வருமாறு:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மாரம்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் டிரைவர் காமராஜ் (வயது27), கெலமங்கலம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சிவானந்தம் மகன் புனித்குமார் (29), கிருஷ்ணகிரியை அடுத்த குருபரதபள்ளி அருகே உள்ள நல்லகொத்தான்பள்ளியை சேர்ந்த ராபித்தீர்கி என்பவர் மகன் பீமல்தீர்கி,

ஒடிசா மாநிலம் பாதுப்பூர் பகுதியில் உள்ள பதேபூரை சேர்ந்த சுரேந்திர சேதி என்பவர் மகன் நாராயணசேதி (35), சோமேஸ்ராய் மகன் குஞ்சாராய், அசாம் மாநிலம் பிஸ்மோரி பகுதியில் உள்ள லுக்கி கிராமம் பிரசைக்கா என்பவர் மகன் நிக்லேஷ் (22), தாலு ஆகியோராவர்.

மேலும் படுகாயம் அடைந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த டோலா, விலாஸ், சுபான் மற்றும் சிஸ்டபா ஆகிய 4 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த 7 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு பஸ், காரை அப்புறப்படுத்தினர்.

இதனிடையே திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பிஸ்சீஷ் முர்மு (35) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அந்தப் பகுதியில் கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், செங்கம் எம்.எல்.ஏ. மு.பெ.கிரி, உதவி கலெக்டர் மந்தாகினி ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர்.

மேலும் மீட்பு பணிகளையும் துரிதப்படுத்தி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

செங்கத்தில் இருந்து மேல் செங்கம் வரை செல்லும் சாலையில் அவ்வப்போது இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது.

சாலை விரிவாக்கம்

சாலையின் நடுவே சென்டர் மீடியன் இல்லாததும், போதிய வெளிச்சம் இல்லாததும், வாகன போக்குவரத்துக்கு ஏற்ற அளவிற்கு சாலையை விரிவாக்கம் செய்யாததும் இந்த விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் செங்கம் முதல் சிங்காரப்பேட்டை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் அமைத்து வெளிச்சம் ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே பகுதியில் அந்தனூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தொடர் விபத்துகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story