சென்னையில் 8-ந்தேதி காத்திருப்பு போராட்டம்


சென்னையில் 8-ந்தேதி காத்திருப்பு போராட்டம்
x

பணி வழங்க காலதாமதமானால் சென்னையில் 8-ந்தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் நல பணியாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி


பொள்ளாச்சியை அடுத்த சேரன்நகரில் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் ரத்தினம் தலைமை தாங்கினார். இதில் பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் மதுக்கரை ஒன்றியங்களை சேர்ந்த பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்து உள்ள மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற்று உடனடியாக பணி வழங்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று அறிவித்து 2 மாதங்கள் ஆகியும் இன்னும் பணி வழங்கவில்லை.


மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான வருகிற 3-ந்தேதி பணி வழங்கும் ஆணையை பிறப்பிக்க வேண்டும். பணி வழங்க காலதாமதமானால் வருகிற 8-ந் தேதி அனைத்து பணியாளர்களையும் ஒன்று திரட்டி சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story