பண்ருட்டி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


பண்ருட்டி அருகே      குடோனில் பதுக்கி வைத்திருந்த 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்             3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Sep 2023 6:45 PM GMT (Updated: 7 Sep 2023 6:45 PM GMT)

பண்ருட்டி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர்

குடோனில் சோதனை

பண்ருட்டி அருகே மருங்கூர் முந்திரி காட்டில் உள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குற்ற நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் ஜெரால்டு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் பாண்டியன், குணசீலன், விஜய் ஆகியோர் விரைந்து சென்று குறிப்பிட்ட அந்த குேடானில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு 8 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மருங்கூரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 41), வேலூரை சேர்ந்த ரவி, வீரமணி ஆகிய 3 பேரும் பண்ருட்டி பகுதியை சேர்ந்த மக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை வெளியூர்களுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

வலைவீச்சு

இதையடுத்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து மாவட்ட குடிமை பொருள் வழங்கல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், மேற்பார்வையாளர் கீதா ஆகியோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து ரேஷன் அரிசியை பதுக்கிய ராஜ்குமார், ரவி, வீரமணி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் பண்ருட்டியில் உள்ள தமிழ்நாடு குடிமை பொருள் பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டது.


Next Story