விழுப்புரம் மாவட்டத்தில் 8 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு


விழுப்புரம் மாவட்டத்தில் 8 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு
x

விழுப்புரம் மாவட்டத்தில் 8 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நாளைமறுநாள்(சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 20.6.2022 முதல் 27.6.2022 வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டது. மரக்காணம் ஒன்றியம் மானூர் ஊராட்சி வார்டு எண்-6, முகையூர் ஒன்றியம் முகையூர் ஊராட்சி வார்டு எண்-8, விக்கிரவாண்டி ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சி வார்டு எண்-4 ஆகிய பதவிகளுக்கு ஒரே ஒரு வேட்பு மனு பெறப்பட்டு போட்டியின்றி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விக்கிரவாண்டி ஒன்றியம் வி.பகண்டை ஊராட்சி வார்டு எண் 2-க்கு 2 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வேட்புமனு திரும்ப பெறப்பட்டது. செஞ்சி ஒன்றியம் பொன்னங்குப்பம் ஊராட்சி வார்டு எண் 7-க்கு பெறப்பட்ட 3 வேட்பு மனுக்களில் 2 மனுக்களும், வார்டு எண் 8-க்கு பெறப்பட்ட 7 வேட்பு மனுக்களில் 6 மனுக்களும், வார்டு எண் 9-க்கு பெறப்பட்ட 7 வேட்பு மனுக்களில் 6 மனுக்களும், நரசிங்கராயன்பேட்டை ஊராட்சி வார்டு எண் 1-க்கு பெறப்பட்ட 3 வேட்பு மனுக்களில் 2 மனுக்களும் திரும்ப பெறப்பட்டன. இதனால் மேற்காணும் வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

3 பதவிக்கு நாளை தேர்தல்

முகையூர் ஊராட்சி ஒன்றியம் காரணை ஊராட்சியில் வார்டு எண் 7-ல் பெறப்பட்ட 6 வேட்பு மனுக்களில் 1 வேட்பு மனு வயது தகுதியின்மையால் நிராகரிக்கப்பட்டு, ஒரு வேட்பு மனு திரும்ப பெறப்பட்ட நிலையில் களத்தில் 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் முண்டியம்பாக்கம் ஊராட்சி வார்டு எண் 9-ல் 3 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு 3 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் அண்ணமங்கலம் ஊராட்சி வார்டு எண் 5-ல் 2 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு இருவரும் களத்தில் உள்ளனர்.

மேற்காணும் 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தற்செயல் தேர்தல் நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்களிக்க மாலை 5 மணி முதல் 6 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதியன்று அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறவுள்ளது.

1 More update

Next Story