80 சென்ட் ஆக்கிரமிப்பு நிலங்கள் கையகப்படுத்தும் பணி


80 சென்ட் ஆக்கிரமிப்பு நிலங்கள் கையகப்படுத்தும் பணி
x

கரூர் அருகே 80 சென்ட் ஆக்கிரமிப்பு நிலங்கள் கையகப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.

கரூர்

ஆக்கிரமிப்பு நிலம் அகற்றும் பணி

கரூர் மாவட்டம், புலியூர் அருகே உள்ள புரவிபாளையத்தை சேர்ந்தவர் பெரியண்ணன். இவர் அப்பகுதியில் உள்ள காளிபாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 80 சென்ட் நிலத்தை கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி விவசாயம் செய்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் பெரியண்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவரது வாரிசுதாரர்கள் அந்த நிலத்தை பயன்படுத்தி அருகாமையில் உள்ள ராஜா வாய்க்காலில் வரும் நீரைக் கொண்டு அப்பகுதியில் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை வளர்த்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் அந்த 80 சென்ட் நிலத்தை சுற்றி கற்கள் நட்டு கம்பி வேலி அமைப்பதற்கான பணியை தொடங்கி உள்ளனர்.

எதிர்ப்பு

இதனால் அந்த இடத்தை பயன்படுத்தி வந்த குடும்பத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 70 ஆண்டுகளாக நிலத்தை பயன்படுத்தி வருகிறோம். இதைக் கொண்டு கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறோம் என கூறி தங்களது எதிர்ப்பை தெரிவித்து இடத்தை மீண்டும் எங்களிடமே தர வேண்டும் என கூறியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தங்கள் கோரிக்கைகளை அந்த நிலத்தை பயன்படுத்தியவர்கள் மனுவாக எழுதி அதிகாரியிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story