டாஸ்மாக் கடைக்கு பூட்டுபோட முயன்ற பெண்கள் உள்பட 80 பேர் கைது


டாஸ்மாக் கடைக்கு பூட்டுபோட முயன்ற பெண்கள் உள்பட 80 பேர் கைது
x

டாஸ்மாக் கடைக்கு பூட்டுபோட முயன்ற பெண்கள் உள்பட 80 பேர் கைது

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை அருகே புளியக்குடி டாஸ்மாக் கடைக்கு பூட்டுபோட முயன்ற பெண்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தின்போது தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் கடை

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே புளியக்குடி ஊராட்சி மேலத்தோப்பு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் மதுஅருந்திவிட்டு போதையில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளை கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர்.

மதுபிரியர்களின் தொல்லையால் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி அந்த பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தினர். அம்மாப்பேட்டை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் ஆகியவை சார்பில் நேற்று கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

பேச்சுவார்த்தை

இதையடுத்து அம்மாப்பேட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் மாவட்ட டாஸ்மாக் அலுவலர்கள் தியாகராஜன், சிவகுமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், நகர செயலாளர் ராஜாராமன், இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்ட தலைவர் தாமரைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் சுமூக தீர்வு ஏற்படவில்லை.

கடைக்கு பூட்டு போட முயன்றனர்

இதையடுத்து அந்த மதுக்கடையை அரசு உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நேற்று அப்பகுதி பொதுமக்கள் அம்மாப்பேட்டை முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக சென்று மதுக்கடைக்கு பூட்டு போட முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் போலீசாரை மீறி பூட்டு போட முயன்றனர்.

தள்ளு முள்ளு; 80 பேர் கைது

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கடையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 80 பேரை அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மதுக்கடை முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story