சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு - அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையை பொறுத்த வரை 1055 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால் தூர்வாரப்பட்டு வருகிறது. இதில் 179.45 கிலோ மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில், மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அடுத்த மாதத்திற்குள் மீதம் இருக்கும் பணிகளை முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். பருவ மழைக்கு முன்பாக பணிகளை நிறைவு செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.