கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்


கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
x

கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி நிரம்பியுள்ள நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரானது கல்லணைக்கு வந்தடைந்ததும், அங்கிருந்து கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

அதாவது கீழணைக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் நுங்கும், நுரையுமாக வந்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணி துறையினர் கீழணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி உபரிநீரை கொள்ளிடம் ஆற்றில் திறந்து விட்டனர்.

இதனால் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இன்று (திங்கட்கிழமை) நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்பதல், கொள்ளிடம் கரையோர மக்களுக்கு பொதுப் பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னைக்கு 63 கனஅடி தண்ணீர்

இதற்கிடையே கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கனவே வீராணம் ஏரியில் முழுகொள்ளளவான 47.50 அடிக்கு தண்ணீர் உள்ளதால், அங்கிருந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு வினாடிக்கு 1260 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 63 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. கடந்த 3 மாத்தில் கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 3-வது முறையாக உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story