தா.பழூர் அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருட்டு


தா.பழூர் அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருட்டு
x

தா.பழூர் அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரத்தை திருடிவிட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரியலூர்

2 கடைகளின் பூட்டு உடைப்பு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் சிலால் நால்ரோடு பகுதியில் வானதிரையான் பட்டினம் செல்லும் சாலையில் மெடிக்கல் கடையை நடத்தி வருகிறார். இதன் அருகே சிலால் கிராமத்தை சேர்ந்த கணபதி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு செல்லம்மாள் மற்றும் கணபதி ஆகியோர் தங்களது கடைகளை பூட்டிவிட்டு சென்றனர்.

நேற்று காலை கணபதி தனது கடையை திறக்க வந்தார். அப்போது மெடிக்கல் மற்றும் மளிகை கடையின் பூட்டை மர்ம ஆசாமிகள் உடைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் செல்லம்மாளுக்கு தகவல் கொடுத்தார்.

ரூ.80 ஆயிரம் திருட்டு

அதன்பேரில் செல்லம்மாள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது மர்ம ஆசாமிகள் கல்லாப்பெட்டியை உடைத்து அதில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம் மற்றும் வெள்ளி கொலுசு உள்ளிட்டவைகளை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் கணபதியின் மளிகை கடையில் சாமி படம் அருகே வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தா.பழூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தடவியல் சப்-இன்ஸ்பெக்டர் சத்யராஜ் தலைமையிலான குழுவினர் அங்கு பதிந்து இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரத்தை திருடிவிட்டு தப்பி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story