800 பக்தர்கள், மலையில் இருந்து இறங்க மறுப்பு
ராஜபாளையம் அருகே சாஸ்தா கோவிலுக்கு சென்ற 800 பக்தர்கள் மலையில் இருந்து இறங்க மறுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சாஸ்தா கோவிலுக்கு சென்ற 800 பக்தர்கள் மலையில் இருந்து இறங்க மறுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாஸ்தா கோவில்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராஜபாளையம், சத்திரப்பட்டி, வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, மீனாட்சிபுரம் மற்றும் திருப்பூர், தேனி, சென்னை பகுதிகளை சேர்ந்த ஒரே சமுதாய மக்கள் சேர்ந்து ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடத்துவது வழக்கம்.
இந்தநிலையில், விருதுநகர், மதுரை, தேனி மாவட்ட வனப்பகுதிகளை இணைத்து கடந்த 2021-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
நிபந்தனைகளுடன் அனுமதி
இதையடுத்து 2021-ம் ஆண்டு முதல் கோவிலில் இரவு தங்குவதற்கும் நேர்த்திக்கடனாக ஆடு, கோழி ஆகியவற்றை பலியிடுவதற்கும் வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கோவிலில் வழிபாடு நடத்த வனத்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போது இரவு நேரத்தில் அங்கு தங்கக்கூடாது. ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு சமைக்க கூடாது. காலை 6 மணிக்கு கோவிலுக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்குள் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் வனத்துறை அனுமதி வழங்கினர்.
தள்ளு, முள்ளு
இதையடுத்து நேற்று காலை முதல் அந்த கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு கிராமத்தினர் சாஸ்தா கோவில் அடிவாரத்தில் குவிந்தனர். அவர்களை சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்திய வனத்துறையினர் சிறு, சிறு குழுக்களாக மட்டுமே கோவிலுக்கு சென்று திரும்ப வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.
இதனை ஏற்றுக்கொள்ளாத மக்கள் சோதனைச்சாவடி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையினருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில பெண்கள் சாமியாடிய படி வனப்பகுதிக்குள் செல்ல முயன்றதால் சிறிது நேரம் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
800 பக்தர்கள் போராட்டம்
அவர்களிடம் சேத்தூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாலை 6 மணிக்குள் திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்ட மக்கள், சோதனை சாவடியில் இருந்து 3 கி.மீ தூரத்தில் மலைப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றனர்.
ஆனால் 6 மணிக்கு மேல் ஆகியும் அடிவாரத்திற்கு திரும்ப மறுத்து 800-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களிடம் வனத்துறையினரும், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி தலைமையிலான போலீசாரும் ேபச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.