800 ஆண்டு பழமைவாய்ந்த சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு


800 ஆண்டு பழமைவாய்ந்த சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
x

தியாகதுருகம் அருகே 800 ஆண்டு பழமைவாய்ந்த சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் ஏரிக்கரை அருகே உள்ள பிடாரி அம்மன் கோவில் வளாகத்தில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்காரஉதியன் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், காப்பாட்சியர் ரஷீத்கான், நூலகர் அன்பழகன், பண்ரூட்டி இமானுவேல், ஆசிரியர் உமாதேவி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இக்கல்வெட்டு 5 அடி நீளமும், 3.5 அடி அகலமும் கொண்டதாகும். மேலும் அந்த கல்லின் இருபுறமும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இதில் 2-ம் குலோத்துங்கசோழனின் "பூமேவி வளர" என்னும் மெய்க் கீர்த்தி முழுமையாக இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் கூறுகையில், எங்களது மையத்தின் சார்பில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கண்ணாடி மணி உருக்கு உலைக்கலன் வீரபாண்டி கிராமத்தில் புலிக்கல் பகுதியிலும், கல்திட்டை (டால்மன்) திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள ஆதிச்சனூரிலும், அந்திலி கிராமத்தில் முதுமக்கள் தாழியையும் கண்டெடுத்துள்ளோம். இப்பகுதி வரலாற்று சிறப்பு மிக்க பகுதி என்று இந்த ஆய்வு மூலம் வெளிப்பட்டு வருகிறது. ஆகவே மத்திய, மாநில அரசுகள் இப்பகுதியில் தொல்லியல் அகழாய்வு நடத்தினால் இப்பகுதியின் தொன்மை வரலாறு வெளிப்படும் என கூறினார். இது தவிர பழமைவாய்ந்த அம்மன் சிலையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


Next Story