நூல் வாங்கி ரூ.81¼ லட்சம் மோசடி; 8 பேர் கும்பல் சிக்கியது
நூல் வாங்கி ரூ.81¼ லட்சம் மோசடி; 8 பேர் கும்பல் சிக்கியது
கோவை
கோவையில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் நூல் பண்டல் வாங்கி ரூ.81¼ லட்சம் மோசடி செய்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஆன்லைன் வர்த்தகம்
கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் நேசமணி. இவர் ஆன்லைன் வர்த்தகம் மூலம் நூல் பண்டல் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கோவை வெள்ளலூரை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 58) என்பவர் நேசமணியை தொடர்பு கொண்டார். பின்னர் புருஷோத்தமன் தனக்கு நூல் பண்டல் தேவைப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து நேசமணி ரூ.33 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான நூல் பண்டல்களை அவருக்கு அனுப்பி வைத்தார்.
நூல் பண்டல்களை பெற்றுக்கொண்ட அவர் அதற்குரிய பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கும்பல் கைது
விசாரணையில் புருஷோத்தமன், அவரின் மகள் கீதாஞ்சலி (24), உக்கடம் ரோஸ்கார்டனை சேர்ந்த காஜா உசேன் (45), போத்தனூர் இந்திரா நகரை சேர்ந்த வீரமுத்து (58), ஈரோடு பெருமாநல்லூரை சேர்ந்த ஆனந்த் (43), திருப்பூர் வடிவேலம்பாளையத்தை சேர்ந்த பாரத் (39), கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த மோசஸ் மேத்யூ (31), அவினாசி சேவூரை சேர்ந்த மருதாச்சலம் (49) ஆகிய 8 பேர் கொண்ட கும்பல் ரூ.33 லட்சத்து 16 ஆயிரத்திற்கு நூல் பண்டல்கள் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.
இவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருப்பூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்த கண்ணன் என்பரிடம் ரூ.48 லட்சத்திற்கு நூல் பண்டல் வாங்கி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதும் தெரியவந்தது.
இது குறித்து பீளமேடு போலீசில் கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.81 லட்சத்து 16 ஆயிரத்திற்கு நூல் பண்டல் வாங்கி ஏமாற்றிய கும்பலால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
வெளி மாநிலங்களில் கைவரிசை
இந்த கும்பல் மராட்டியம், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் ஆன்லைன் மூலம் மளிகை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து, அதற்குரிய பணத்தை கொடுக்காமல் மோசடி செய்ததும் தெரியவந்தது. இந்த கும்பலின் தலைவனாக போத்தனூரை சேர்ந்த புருஷோத்தமன் செயல்பட்டு உள்ளார்.
வெளிமாநிலங்களில் கைவரிசை காட்டிய இந்த கும்பலிடம் இருந்து 2 மடிக்கணினிகள், 7 செல்போன்கள், 3 கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். கோவை, ஈரோடு மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் பலரிடம் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு உள்ளதால், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் இந்த மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.