சவர்மா சாப்பிட்ட மாணவி சாவு எதிரொலி:82 கிலோ உணவு, இறைச்சி பறிமுதல்


சவர்மா சாப்பிட்ட மாணவி சாவு எதிரொலி:82 கிலோ உணவு, இறைச்சி பறிமுதல்
x

சவர்மா சாப்பிட்டு மாணவி பலியானதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் ஓட்டல்களில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 82 கிலோ நாள்பட்ட உணவு, இறைச்சி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 35 கடைகாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல்

மாணவி சாவு

நாமக்கல்லில் தனியார் துரித உணவகத்தில் சாப்பிட்ட சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த 14 வயது சிறுமி கலையரசி நேற்று முன்தினம் காலை பரிதாபமாக இறந்தார். மேலும் 43 பேர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை தொடர்ந்து நேற்று கலெக்டர் உமா உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர், துப்புரவு அலுவலர், சுகாதார ஆய்வாளர் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள துரித உணவகங்கள், சைவ ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

35 கடைகளுக்கு நோட்டீஸ்

இந்த குழுவினர் நேற்று மட்டும் 140 ஓட்டல்களில் சோதனை நடத்தினர். இதில் 37 கடைகளில் இருந்து 82.35 கிலோ எடையுள்ள நாள்பட்ட உணவுகள், காய்கறிகள் மற்றும் இறைச்சிகள் கண்டறியப்பட்டு, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. இதுசம்பந்தமாக 35 கடைக்காரர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு, ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story