பயனாளிகளுக்கு ரூ.82½ லட்சம் கடன் உதவி
மயிலாடுதுறையில் பயனாளிகளுக்கு ரூ.82½ லட்சம் கடன் உதவியை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
மயிலாடுதுறையில் பயனாளிகளுக்கு ரூ.82½ லட்சம் கடன் உதவியை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
கடன் உதவி
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.82 லட்சத்து 57 ஆயிரத்து 804-க்கான கடன் உதவிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோவில் மற்றும் சீர்காழி வட்டாரங்களில் 94 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் ஊரக தொழில் முனைவுகள் உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் நோக்கமாகும்.
30 சதவீத மானியம்
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படும் ஊரக பகுதிகளில் ஏற்கனவே தொழில் செய்து வருவோர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களை கண்டறிந்து தொழில் குறித்த ஆலோசனைகள் மற்றும் வணிக திட்டம் தயாரித்தல் போன்றவை மகளிர் வாழ்வாதார சேவை மையம் மூலமாக செய்து தருவதோடு தொழில்திட்டத்தில் அடிப்படையில் 30 சதவீதம் மானியத்துடன் வங்கிகள் மூலம் கடன் பெற்று தரப்படுகிறது.
இணை மானிய நிதி மூலம் செம்பனார்கோவில் மற்றும் சீர்காழி வட்டாரங்களில் உள்ள 112 தொழில் முனைவோர்களுக்கு இதுவரை ரூ.1 கோடியே 11 லட்சத்து 12 ஆயிரத்து 922 வழங்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்கள் வங்கி கடனை முறையாக செலுத்தி தொழிலை விரிவுப்படுத்தி தங்களை போன்று மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக செயல்பட வேண்டும்.
தொழில் முனைவோர்கள்
வங்கியாளர்கள் தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு வங்கி கடனை விரைவாக வழங்கி அவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக சேவை புரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் ராஜேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் வேல்முருகன், மாவட்ட தாட்கோ மேலாளர் சுகந்தி பரிமளம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர்கள், வங்கியாளர்கள் கலந்துகொண்டனர்.