தெற்கு ரெயில்வேயில் 82 சதவீத வழித்தடம் மின்மயமாக்கம் -தெற்கு ரெயில்வே தகவல்


தெற்கு ரெயில்வேயில் 82 சதவீத வழித்தடம் மின்மயமாக்கம் -தெற்கு ரெயில்வே தகவல்
x

82 சதவீத வழித்தடம் மின்மயமாக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக ரெயில்வேக்கு 2022-2023-ம் நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.3 ஆயிரத்து 865 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ரெயில் தண்டவாளங்களை அகலப்படுத்துவது, 2, 3-க்கும் மேற்பட்ட ரெயில்பாதை தடங்களை அமைப்பது, மின்சார உதவியில் இயக்கும் தொலைதூர ரெயில் சேவைகள் ஆகியவை திறம்பட நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 400 கி.மீ. ரெயில்வே தண்டவாளங்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பழனி-பொள்ளாச்சி-பாலக்காடு இடையே 116.66 கி.மீ., செங்கோட்டை-ஆரியங்காவு இடையே 19.11 கி.மீ., பொள்ளாச்சி-போத்தனூர் இடையே 39.79 கி.மீ., திருவாரூர்-திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே 149 கி.மீ., மதுரை-தேனி இடையே 75 கி.மீ. என மேற்கண்ட அனைத்து வழித்தடங்களிலும் தண்டவாளங்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய வழித்தடங்கள்

இதேபோல் கடந்த 8 ஆண்டுகளில் 639.22 கி.மீ. தூரத்துக்கு 2, 3-க்கும் மேற்பட்ட ரெயில் பாதைத் வழித்தடங்களுக்கான பணிகள் முடிவடைந்துள்ளன. இதில் கல்லக்குடி பழங்காநத்தம்-அரியலூர் இடையே 24.5 கி.மீ., செங்கல்பட்டு-கருங்குழி-மதுராந்தகம் இடையே 24.65 கி.மீ., தொழுப்பேடு-ஒலக்கூர்-திண்டிவனம்-பேரணி இடையே 40.2 கி.மீ., விழுப்புரம்-திருவெண்ணெய்நல்லூர்-விருத்தாச்சலம்-மாத்தூர்-அரியலூர் இடையே 108.78 கி.மீ., திருச்சி-மணப்பாறை-கல்பட்டிசத்திரம்- தாமரைப்பாடி-திண்டுக்கல் இடையே 90.17 கி.மீ., பொன்மலை புறவழிச்சாலையில் 2.3 கி.மீ., வாலடி- கோல்டன் ராக், கோல்டன் ராக்-சோளகம்பட்டி, சோளகம்பட்டி-தஞ்சாவூர் என மொத்தம் 29 கி.மீ., தக்கோலம்-அரக்கோணம் இடையே 11.29 கி.மீ., திருமங்கலம்-துலுக்கபட்டி-கோவில்பட்டி-கடம்பூர்-வஞ்சிமணியாச்சி-கங்கைகொண்டான்-திருநெல்வேலி, கடம்பூர்-தட்டப்பாறை-மிளவட்டான் என இடையே 129 கி.மீ., ஓமலூர்-மேச்சேரி சாலை-மேட்டூர் அணை இடையே 28 கி.மீ. ஆகிய வழித்தடங்கள் இரட்டை பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன.

இதேபோல் பொன்மலை-திருச்சி இடையே 3-வது பாதையாக 2.84 கி.மீ., தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது பாதையாக 30 கி.மீ., சென்னை கடற்கரை-அத்திப்பட்டு இடையே 4-வது பாதையாக 22.1 கி.மீ., கடற்கரை-கொருக்குப்பேட்டை இடையே 3-வது பாதையாக 4.2 கி.மீ., சென்டிரல்-பேசின் பாலம் இடையே 5-வது மற்றும் 6-வது பாதையாக 4.4 கி.மீ. ஆகிய வழித்தடங்கள் 3 மற்றும் 3-க்கும் மேற்பட்ட பாதைகளாக மாற்றப்பட்டுள்ளது.

மின்மயமாக்கல்

ரெயில் பாதைகளை மின்சாரமயமாக்குவதன் மூலம் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் ரெயில்கள் இயங்க வழிவகுக்கும். இதேபோல் டீசல் போன்றவற்றுக்கான செலவு குறைக்கப்பட்டும், சேவைகளை அதிவிரைவாக வழங்கவும் வழிவகுக்கும். வருகிற 2023-ம் ஆண்டுக்குள் ரெயில் சேவைகள் அனைத்திலும் முழுவதுமாக மின்மயமாக்க வேண்டும் என்பது இந்திய ரெயில்வேயின் நோக்கமாகும்.

அந்தவகையில் தெற்கு ரெயில்வே அதன் ரெயில் சேவைகளில் 82 சதவீதத்தை மின்மயமாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் 1,664 கி.மீட்டர் தூரம் செயல்படும் ரெயில்வே தடங்கள் அனைத்தும் கடந்த 8 ஆண்டுகளில் மின்மயமாக்கப்பட்டுள்ளன. 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை அமல்படுத்தியதைவிட இது 170 சதவீதம் அதிகரித்துள்ளது.

விழுப்புரம்-காட்பாடி 150 கி.மீ., விருதுநகர்-தூத்துக்குடி-திருநெல்வேலி 145 கி.மீ, கோயம்புத்தூர் வடக்கு-மேட்டுப்பாளையம் 33 கி.மீ., ஈரோடு-கரூர்-திருச்சி 140 கி.மீ., கரூர்-திண்டுக்கல் 71 கி.மீ., சேலம்-கரூர் 83.45 கி.மீ., விழுப்புரம்-கடலூர் 47.70 கி.மீ., திருச்சி-தஞ்சாவூர் 45.14 கி.மீ., அரக்கோணம்-தக்கோலம் 11.29 கி.மீ., தஞ்சாவூர்-திருவாரூர் 54 கி.மீ., கடலூர் துறைமுகம்-திருவாரூர் 114 கி.மீ., திருச்சி டவுன்-கோல்டன் ராக் பைபாஸ் 2.07 கி.மீ., திருவாரூர்-நாகூர் 31.87 கி.மீ., மயிலாடுதுறை-தஞ்சாவூர் 68 கி.மீ., விருத்தாசலம்-கடலூர் துறைமுகம் 55.48 கி.மீ., நீடாமங்கலம்-மன்னார்குடி 13.98 கி.மீ., பொள்ளாச்சி-போத்தனூர் 41.22 கி.மீ., மதுரை- மானாமதுரை 47.54 கி.மீ., சேலம்-ஆத்தூர்-விருத்தாசலம் 136 கி.மீ., மானாமதுரை-ராமநாதபுரம் 60.67 கி.மீ., திருச்சி-புதுக்கோட்டை-காரைக்குடி 89.13 கி.மீ., பழனி-பொள்ளாச்சி-முதலாமடை 84.4 கி.மீ., மானாமதுரை-விருதுநகர் 63.22 கி.மீ. ஆகிய வழித்தடங்களில் மின்மயமாக்கல் திட்டம் கடந்த 8 ஆண்டுகளில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story