வெளிநாடுகளில் சிக்கி தவித்த 83 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி


வெளிநாடுகளில் சிக்கி தவித்த 83 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
x

வெளிநாடுகளில் சிக்கி தவித்த 83 தமிழர்கள் இதுவரை தமிழக அரசின் உதவியுடன் மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

சென்னை

மீனம்பாக்கம்,

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை தகவல் தொழில்நுட்ப வேலைக்கு என்று கூறி கம்போடியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அழைத்துச்சென்று அங்கு சட்டவிரோத வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துவதாகவும், அதற்கு மறுத்தால் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் தமிழ்நாடு அரசுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபர்கள், தமிழ்நாடு அரசின் அயலகத்தமிழர் நலத்துறை மூலம் இந்திய தூதரகத்துடன் இணைந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி தகவல் தொழில்நுட்ப வேலைகளுக்காக சட்டவிரோதமாக கம்போடியா அழைத்துச்செல்லப்பட்ட சேலத்தை சேர்ந்த ஜோசப், விருதுநகரை சேர்ந்த கேசவன் ஆகிய 2 பேர் தமிழ்நாடு அரசு உதவியுடன் மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர்.

சென்னை விமான நிலையம் வந்த ஜோசப், கேசவன் இருவரையும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அயலகத் தமிழர் நலத்துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ், துணை கமிஷனர் ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

கம்போடியாவில் இருந்து 27 தமிழர்களும், மியான்மர் நாட்டில் இருந்து 22 தமிழர்களும், தாய்லாந்து நாட்டில் இருந்து 34 தமிழர்களும் என இதுவரை வெளிநாடுகளில் சிக்கி தவித்த 83 தமிழர்கள், தமிழக அரசின் உதவியுடன் மீட்டு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அதிக ஊதியம் மற்றும் பதிவு பெறாத முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு சென்று சட்டவிரோத கும்பல்களிடம் சிக்கி துன்புறும் சம்பவம் தொடர்கிறது. கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களின் நம்பகத்தன்மையை அறிந்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story