மதுரையில் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
மதுரையில் நேற்று நடந்த சிறப்பு முகாம்களில் 83 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மதுரையில் நேற்று நடந்த சிறப்பு முகாம்களில் 83 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடத்தப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் என 3,415 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தது.
இதில், புறநகர் பகுதியில் 2,415 மையங்களில் 1,055 சுகாதார ஊழியர்களும், நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 1000 மையங்களில் 600 ஊழியர்களும் பணியில் ஈடுபட்டனர். இந்த முகாம்களில் முதல் தவணை, 2-வது தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஆகியவை செலுத்தப்பட்டது. நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த அந்த சிறப்பு முகாம்களில் 83 ஆயிரத்து 659 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில், 2,352 பேர் முதல் தவணையும், 71 ஆயிரத்து 593 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும், 9 ஆயிரத்து 714 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. தகுதி உள்ள நபர்கள் வரும் காலங்களில் காலம் கடத்தாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதிதாக 38 பேருக்கு..
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மதுரையிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 25 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதுபோல், புதிதாக 55 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீட்டிற்கு சென்றனர். இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 284- ஆக உள்ளது.