விழுப்புரம் மாவட்டத்தில் 835 மாணவர்கள் உயர்கல்வி பிரிவுகளில் சேர விண்ணப்பம்
உயர்வுக்கு படி வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 835 மாணவர்கள் உயர்கல்வி பிரிவுகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
உயர்வுக்கு படி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
மாணவர்களிடையே கல்வி குறித்த பயன்பாட்டை எடுத்துக்கூறும் வகையிலும், மாணவர்களுக்கு கல்வி குறித்த வழிகாட்டுதல் வழங்கிடும் வகையில் 'நான் முதல்வன்" திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதலும், உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 'நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 'உயர்வுக்கு படி" நிகழ்ச்சியின் மூலம் 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வி படிக்காத 30,269 மாணவ-மாணவிகளில் கலை அறிவியல் கல்லூரிகளில் 7,884 மாணவ- மாணவிகளும், பொறியியல் கல்லூரிகளில் 2,144 மாணவ- மாணவிகளும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,461 மாணவ- மாணவிகளும், ஐ.டி.ஐ-யில் 1,876 பேரும், பிற உயர்நிலைப்படிப்புகளில் 2,348 பேரும் என மொத்தம் 15,713 மாணவ- மாணவிகள் உயர்கல்வி பயில வழிவகை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
835 மாணவர்கள் விண்ணப்பம்
அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 391 மாணவ- மாணவிகளும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 455 மாணவர்களும் என மொத்தம் 846 மாணவ- மாணவிகள் 'உயர்வுக்கு படி" நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதன் மூலமாக உடனடி சேர்க்கையாக 13 மாணவ- மாணவிகளுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கையும், 2 மாணவ- மாணவிகளுக்கு தொழில்நுட்ப கல்வியில் சேர்க்கை என மொத்தம் 15 மாணவ- மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு சேர்க்கை நடத்தப்பட்டு தற்போது உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் விழுப்புரம், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 835 மாணவ- மாணவிகள், பொறியியல் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, ஐ.டி.ஐ. திறன் பயிற்சி கல்லூரி போன்ற பல்வேறு பிரிவுகளில் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளனர். இம்மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி படிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.