84 மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்ப்பு


84 மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்ப்பு
x
தினத்தந்தி 3 Feb 2023 7:00 PM GMT (Updated: 2023-02-04T00:30:31+05:30)

திண்டுக்கல் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தில் 84 மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர்.

திண்டுக்கல்


தமிழகத்தில் மாணவ-மாணவிகளிடம் இருக்கும் தனித்திறமைகளை கண்டறிந்து, அதற்கு ஏற்ப அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாணவ-மாணவிகள் திறமை, ஆர்வம் ஆகியவற்றுக்கு ஏற்ப மேல்படிப்புகளுக்கு வழிகாட்டப்படுகிறது. அதுமட்டுமின்றி மாணவ-மாணவிகள் உயர்கல்வியை பெறுவது உறுதி செய்யப்படுகிறது.


அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 முடித்து உயர்கல்விக்கு செல்லாத மாணவ-மாணவிகளின் விவரம் சேகரிக்கப்பட்டது. இதையடுத்து 38 மாணவர்கள், 75 மாணவிகள் என மொத்தம் 113 பேரை நேரில் அழைத்து உயர்கல்வி ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் தலைமையிலான கல்வி அதிகாரிகள் மாணவர்களுக்கு வழிகாட்டினர்.


மேலும் மாணவர்களின் ஆர்வம், திறனுக்கு ஏற்ப உயர்கல்வி பயில்வதற்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதன் விளைவாக பட்டப்படிப்பு, பொறியியல், தொழிற்பயிற்சி, சுகாதார ஆய்வாளர், செவிலியர் உள்ளிட்ட படிப்புகளில் 84 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர். எனவே நான் முதல்வன் திட்டம் மூலம் 84 மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி படிப்பது குறிப்பிடத்தக்து. மேலும் அந்த மாணவ-மாணவிகள் கல்வியை தொடரும் வகையில் கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.Next Story