பலத்த மழைக்கு 8,500 வாழைகள் முறிந்து சேதம்
கிணத்துக்கடவு பகுதியில் பலத்த மழைக்கு 8,500 வாழைகள் முறிந்து சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் பலத்த மழைக்கு 8,500 வாழைகள் முறிந்து சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
பலத்த மழை
கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையாக வெயில் வாட்டி எடுத்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் தொடங்கிய பலத்த மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. அப்போது கிணத்துக்கடவில் இருந்து சொக்கனூர் செல்லும் சாலையில் சிங்கையன் புதூர் பகுதியில் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் உடைந்தன. மேலும் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நெடுஞ்சாலை துறையினர் சென்று சாலையில் கிடந்த மரங்களை வெட்டி அகற்றினார்கள். மேலும் சிங்கையன் புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்துக்குள் நின்ற மரம் சாய்ந்து விழுந்ததில், அருகில் நின்ற கொடிக்கம்பம் உடைந்தது.
மின்தடை
அதே பகுதியில் சாந்தலிங்கம் என்ற விவசாயி தோட்டத்தில் நேந்திரம் வாழை மரங்கள் குழை தள்ளிய நிலையில் இருந்தது. ஆனால் சூறாவளி காற்றில் சிக்கி 2 ஆயிரம் வாழை மரங்களும் முறிந்தன. பகவதிபாளையம் நெம்பர் 10 முத்தூர் ரோட்டில் சாலையோரம் நின்ற புளிய மரம் ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த மரத்தை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இது தவிர கிணத்துக்கடவு, மணிகண்டபுரம், வடபுதூர், கல்லாபுரம், சிங்கையன்புதூர் உள்பட பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. அதை சரி செய்யும் பணியில் மின் வாரிய பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நல்லட்டிபாளையத்தில் ஒரு வீடு சேதம் அடைந்தது. கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகள் சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கீழே சரிந்தது.
அறிக்கை தர உத்தரவு
இதேபோன்று வடபுதூர், சூலக்கல் உள்ளிட்ட பல கிராமங்களில் ஏராளமான வாழை மரங்கள் சூறாவளி காற்றுக்கு கீழே முறிந்து விழுந்தன. நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 500 வாழைகள் முறிந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர். மழையில் ஏற்பட்ட சேத விவரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர வருவாய்த்துறையினருக்கு, கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா உத்தரவிட்டுள்ளார். அதன்படி கிராம நிர்வாக அலுவலர்கள் ஒவ்வொரு கிராமங்களில் மழையால் ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர். பல இடங்களில் தென்னை மரங்களும் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது தென்னை மரங்கள் சேத விவரம் குறித்து தோட்டக்கலை துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.