ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 871 பேர் கைது
கோவை மண்டலத்தில் இது வரை ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 871 பேர் கைது செய்யப்பட்டனர். 250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மண்டலத்தில் இது வரை ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 871 பேர் கைது செய்யப்பட்டனர். 250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி கடத்தல்
கோவை மண்டல குடிமைப்பொருள் குற்றப்புலனய்வு துறை போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரிலும், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி அறிவுறுத்தலின் பேரிலும் கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய கோவை மண்டலத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 6 மாதத்தில் கோவை மண்டலத்தில் ரேஷன் அரிசி மற்றும் மண்எண்ணெய் கடத்தல் தொடர்பாக 821 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 871 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வாகனங்கள் பறிமுதல்
அவர்களிடம் இருந்து 3 ஆயிரம் டன் ரேஷன் அரிசி, 26 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் அரசு மானிய விலையில் வழங்கும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக 247 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 445 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
டீசல் பதுக்கி வைத்தது தொடர்பாக 1 வழக்கு பதியப் பட்டு, 1,500 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள்-154, மூன்று சக்கர வாகனங்கள்-14, நான்கு சக்கர வாகனங்கள்-82 என மொத்தம் 250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
கள்ளச்சந்தை
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 165 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் மீது கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 385 வழக்குகள் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கோர்ட்டு மூலம் தண்டனை பெற்று தரப்பட்டு உள்ளது.
ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான புகார்களை 18005995950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.