கடலூர் மாவட்டத்தில் சாராயம்-மதுபாட்டில்கள் விற்ற 88 பேர் கைது
மரக்காணத்தில் சாராயம் குடித்து 6 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சாராயம் - மதுபாட்டில்கள் விற்ற 88 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்
கடலூர்
6 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த 6 பேர் சாராயம் குடித்து உயிரிழந்தனர். மேலும் பலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியை மட்டுமின்றி, தமிழகத்தையே உலுக்கி உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சாராய வேட்டை நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்வோரையும், புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு சாராயம் கடத்தி வருவோரையும் பிடித்து கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
88 பேர் கைது
அதன்படி கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு ஆகிய 7 உட்கோட்டங்களிலும் அந்தந்த உதவி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இது தவிர மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரும் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, உட்கோட்டம் வாரியாக கடலூரில் 13 பேர், சிதம்பரம், விருத்தாசலத்தில் தலா 8 பேர், நெய்வேலியில் 16 பேர், சேத்தியாத்தோப்பில் 5 பேர், பண்ருட்டியில் 13 பேர், திட்டக்குடியில் 5 பேர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையங்கள் சார்பில் 20 பேர் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக கைது செய்தனர். மொத்தம் 88 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 226 லிட்டர் சாராயம், 517 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.