கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை 8,925 பேர் எழுதினர்
கடலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை 8 ஆயிரத்து 925 பேர் எழுதினர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை 8 ஆயிரத்து 925 பேர் எழுதினர்.
கிராம உதவியாளர் பணி
கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 148 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில், கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. இதற்காக கடலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருத்தாசலம் விருத்தாம்பிகை கல்வி நிறுவனம், வடவாடி செந்தில் பள்ளி, மருத்துவர் ராமதாஸ் கலைக்கல்லூரி உள்பட மாவட்டம் முழுவதும் 19 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இதில் 12 ஆயிரத்து 510 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை 10 மணிக்கு தேர்வு என்றாலும், தேர்வர்கள் ஹால்டிக்கெட்டுடன் காலை 9.45 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
தொடர் மழை
இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் பெரும்பாலான தேர்வர்கள் காலை 8 மணிக்கே வர தொடங்கினர். சிலர் மழையில் நனைந்தும், குடைபிடித்தபடியும், மழை கோட் அணிந்தபடியும் தேர்வு மையங்களுக்கு வந்தனர். பிறகு காலை 9 மணிக்கு பிறகு மழை ஓய்ந்தது.
இதையடுத்து அவர்கள் 9.50 மணிக்கு முன்னதாக தேர்வு நடைபெறும் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு மையங்களுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். கால்குலேட்டர், செல்போன், புளுடூத் உள்ளிட்ட எந்த வித எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
8,925 பேர் எழுதினர்
மேலும் காலை 9.50 மணிக்கு பிறகு வந்த தேர்வர்களை தேர்வு மையங்களுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. நுழைவு வாயிலில் இருந்த போலீசாரே அவர்களை வெளியே அனுப்பினர். தொடர்ந்து எழுத்துத் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணி வரை நடந்தது. இந்த தேர்வை 8,925 பேர் எழுதினர். 3,585 பேர் தேர்வு எழுத வரவில்லை.
முன்னதாக தேர்வை யாரும் காப்பி அடித்து எழுதுகிறார்களா? என்று அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். தேர்வர்களுக்கு வசதியாக அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.
சப்-கலெக்டர் ஆய்வு
தேர்வின் போது வெளிநபர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. சிலர் கைக்குழந்தைகளுடன் தேர்வு எழுத வந்தனர். அவர்கள் தேர்வு எழுத செல்லும் போது, தங்கள் குழந்தைகளை, தங்களுடன் வந்திருந்த உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றதை பார்க்க முடிந்தது.
மேலும் விருத்தாசலம் பகுதியில் நடந்த தேர்வை சப்-கலெக்டர் பழனி, தேர்வு மையங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், தாசில்தார் தனபதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். தேர்வையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.