எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 89.34 சதவீதம் தேர்ச்சி கடந்த ஆண்டை காட்டிலும் 4.87 சதவீதம் அதிகரிப்பு
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 89.34 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 4.87 சதவீதம் அதிகரித்துள்ளது
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 226 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 120 மாணவர்கள், 10 ஆயிரத்து 373 மாணவிகள் என மொத்தம் 21,493 பேர் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வு முடிவுகள் நேற்று காலை 10 மணி அளவில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனால் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் தங்களது செல்போனில் தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர்.
89.34 சதவீதம்
இதில் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 609 மாணவர்கள், 9 ஆயிரத்து 592 மாணவிகள் என மொத்தம் 19,201 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 86.41 சதவீதமும், மாணவிகள் 92.47 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக மாவட்டத்தில் 89.34 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளை பொறுத்தவரை 7 ஆயிரத்து 499 மாணவர்கள், 7 ஆயிரத்து 554 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 43 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 6 ஆயிரத்து 182 மாணவர்கள், 6 ஆயிரத்து 848 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 30 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளியில் 86.62 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
4.87 சதவீதம் அதிகரிப்பு
கடந்த 2022-ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 84.47 சதவீதம் பெற்று, 35-வது இடத்தில் இருந்தது. தற்போது இந்த ஆண்டு 89.34 சதவீதம் தேர்ச்சி பெற்று 7 இடங்கள் முன்னேறி 28-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது 4.87 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது.