9 கிலோ குட்கா பறிமுதல்
குருவராஜபேட்டையில் 9 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, பெட்டிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டை பகுதியில் உள்ள கடைகளில் நேற்று அரக்கோணம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பழனி (வயது 41) என்பவரது பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட 9 கிலோ குட்கா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் குட்காவை பறிமுதல் செய்து, பழனி மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோன்று அரக்கோணம் டவுன் போலீசார் கும்பினிபேட்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வீட்டின் முன் நின்றிருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் பெயர் கவுரி (47) என்பதும், மது பாட்டில்கள் விற்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து வீட்டின் பின் புறத்தில் மறைத்து வைத்திருந்த 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.