மண்டபம் மீனவர்கள் 9 பேர் விடுவிப்பு


மண்டபம் மீனவர்கள் 9 பேர் விடுவிப்பு
x
தினத்தந்தி 8 Aug 2023 6:45 PM GMT (Updated: 8 Aug 2023 6:46 PM GMT)

இலங்கை சிறையில் இருந்து மண்டபம் மீனவர்கள் 9 பேர் விடுவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் அவர்களின் படகுகளை விடுவிக்க அந்நாட்டு கோர்ட்டு மறுத்துவிட்டது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

இலங்கை சிறையில் இருந்து மண்டபம் மீனவர்கள் 9 பேர் விடுவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் அவர்களின் படகுகளை விடுவிக்க அந்நாட்டு கோர்ட்டு மறுத்துவிட்டது.

மீனவர்கள் கைது

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு துறைமுக பகுதியில் இருந்து கடந்த 25-ந் தேதி 2 விசைப்படகுகளில் 9 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 9 மீனவர்களும் இலங்கை கடற்படையால் நடுக்கடலில் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மண்டபம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்களும் நேற்று ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நிபந்தனையுடன் விடுவிப்பு

அப்போது நீதிபதி, 9 மீனவர்களையும் விடுவித்து உத்தரவிட்டார். அதே நேரத்தில், இனி எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் வந்தால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். படகுகளை விடுவிக்க முடியாது என்றும் நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டார்.

பின்னர் மண்டபம் மீனவர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். விரைவில் அவர்கள் விமானம் மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படாதது வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக மீனவ அமைப்பினர் தெரிவித்தனர். மண்டபம் மீனவர்களின் படகுகள் உள்பட இலங்கை வசம் உள்ள அனைத்து தமிழக படகுகளையும் மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story