90 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருப்பத்தூரில் 90 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். அ.நல்லதம்பி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முகாமில் 60 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், 6 பேருக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டைகள், 20 பேருக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு, 4 பேருக்கு ெரயில் பயண சலுகை அட்டைகள் என மொத்தம் 90 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் திருப்பத்தூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.85 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் ஒருவருக்கு வழங்கப்பட்டது.
முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.