தமிழகத்தில் 91 சதவீதம் தனியார் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின -கல்வித்துறை தகவல்


தமிழகத்தில் 91 சதவீதம் தனியார் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின -கல்வித்துறை தகவல்
x

தொடர் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையிலும் தமிழகத்தில் 91 சதவீதம் தனியார் பள்ளிகள் இயங்கியதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணம் விவகாரத்தில், நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர். இதற்கு கண்டனம் தெரிவித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அதுவரை பள்ளிகள் இயங்காது என்றும் நேற்று அறிவித்தது.

இதற்கு கல்வித்துறை, சட்ட விதிகளை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் எடுத்தது. அந்த எச்சரிக்கையையும் மீறி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது.

ஆனால் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்த இந்த வேலைநிறுத்தத்தில், தமிழக முழுவதும் உள்ள சில தனியார் பள்ளிகளே கலந்து கொண்டன. பெரும்பாலான பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின.

91 சதவீதம் தனியார் பள்ளிகள் இயங்கின

தமிழகம் முழுவதும் உள்ள 11 ஆயிரத்து 335 தனியார் பள்ளிகளில் 10 ஆயிரத்து 348 பள்ளிகள் நேற்று வழக்கம்போல் திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்பட்டுள்ளன. அதாவது 91 சதவீதம் தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் வழக்கம்போல் இயங்கி இருப்பது கல்வித்துறையின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

இதில் 11 மாவட்டங்களில் 100 சதவீதம் தனியார் பள்ளிகள் இயங்கியுள்ளன. பள்ளி சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட 92 சதவீதம் பள்ளிகள் இயங்கி இருப்பதாக கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 32 சதவீதம் பள்ளிகள் மட்டுமே இயங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வி ஆணையரிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார், 'சக்தி பள்ளியில் நடந்த சம்பவம் இறுதி சம்பவமாக இருக்க வேண்டும் என்றும், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு இருப்பது போல, தனியார் பள்ளிகளின் பாதுகாப்புக்கும் தனி சட்டம் கொண்டு வரவேண்டும்' என்றும் அதிகாரிகளிடம் கூறியதாக தெரிவித்தார்.


Next Story