வானூர் பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி1,069 பேரிடம் ரூ.93½ லட்சம் மோசடிபெண் கைது; 4 பேருக்கு வலைவீச்சு


வானூர் பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி1,069 பேரிடம் ரூ.93½ லட்சம் மோசடிபெண் கைது; 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 March 2023 6:45 PM GMT (Updated: 29 March 2023 6:45 PM GMT)

வானூர் பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி 1,069 பேரிடம் ரூ.93½ லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

ரூ.93½ லட்சம் மோசடி

புதுச்சேரி மாநிலம் ரெட்டிப்பாளையம் ஜெயா நகரை சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி ஜோதி (வயது 50). விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த பட்டானூர் வசந்தபுரத்தை சேர்ந்த காத்தலிங்கம், அவரது மனைவி பூங்கொடி, மகன் நிர்மல்குமார், மகள் மகாலட்சுமி, உறவினர் விக்னேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வந்தனர்.

இவர்களிடம் ஜோதி கடந்த 15 ஆண்டுகளாக தீபாவளி சீட்டுப்பணம் மாதந்தோறும் கட்டி வந்துள்ளார். மேலும் ஜோதி உள்பட 23 பேர் முகவர்களாக இருந்துகொண்டு கடந்த 15.11.2021 முதல் 10.10.2022 வரை வானூர், பட்டானூர், வசந்தபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், 1,069 பேர்களிடமிருந்து மளிகைப்பொருட்கள் சீட்டு, நகை சீட்டு, பணச்சீட்டு என்று ரூ.93 லட்சத்து 55 ஆயிரத்தை வசூல் செய்து பூங்கொடி, காத்தலிங்கம் உள்ளிட்ட 5 பேரிடமும் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்ற அவர்கள் 5 பேரும், மேற்கண்ட நபர்களுக்கு உரிய நகைகள், மளிகைப்பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை திருப்பித்தராமல் ஏமாற்றி தலைமறைவாகி விட்டனர்.

பெண் கைது

இதுகுறித்து ஜோதி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட நபர்கள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் பூங்கொடி உள்ளிட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்கரபாணி, ராஜலட்சுமி மற்றும் போலீசார் பூங்கொடியை (49) நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள காத்தலிங்கம் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story