93-ம் ஆண்டு உப்பு சத்தியாகிரக பாதயாத்திரை
வேதாரண்யத்தில் 93-ம் ஆண்டு உப்பு சத்தியாகிரக நினைவு தினம்- உப்பு அள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் 93-ம் ஆண்டு உப்பு சத்தியாகிரக நினைவு தினம்- உப்பு அள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
உப்பு அள்ளும் போராட்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஆங்கில அரசு உப்புக்கு விதித்த வரியை எதிர்த்து 1930-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி மூதாறிஞர் ராஜாஜி, சர்தார் வேதரத்தினம் உள்ளிட்ட தியாகிகள் அகஸ்தியன்பள்ளியில் உப்பு அள்ளும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு திருப்பு முனையாக அமைந்தது.
இதனை நினைவு கூறும் வகையில் நேற்று வேதாரண்யம் உப்புசத்தியா கிரக நினைவு கட்டிடத்தில் இருந்து மயிலாடுதுறை முன்னாள் எம்.பி.ராஜேந்திரன் தலைமையில், சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வேதரத்தினத்தின் பேரன்கள் கயிலைமணி வேதரத்தினம், கேடிலியப்பன் உள்ளிட்ட பாதயாத்திரை குழுவினர் தேச பக்தி பாடல்களை பாடியவாறு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சுமார் 3 கி.மீ. நடைபயணம் மேற்கொண்டனர்.
நினைவு ஸ்தூபியில் மலர் மாலை
தொடர்ந்து அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் உப்பு அள்ளி வந்தே மாதரம் என முழக்கமிட்டனர். பின்னர் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி தேசபக்தி பாடல்களை பாடினர்.
நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகி குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த உப்பை நினைவு பொருளாக எடுத்து சென்றனர்.