கோவையில் 93.49 சதவீதம் பேர் தேர்ச்சி


கோவையில் 93.49 சதவீதம் பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கோவையில் 93.49 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

கோயம்புத்தூர்

கோவை

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கோவையில் 93.49 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதி முடிவடைந்தது. கோவை மாவட்டத்தில் இந்த தேர்வை 20 ஆயிரத்து 81 மாணவர்கள், 20 ஆயிரத்து 175 மாணவிகள் என மொத்தம் 40 ஆயிரத்து 256 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

இதையடுத்து நேற்று காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோர், நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்தனர்.

93.49 சதவீத தேர்ச்சி

கோவை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 221 மாணவர்கள், 19 ஆயிரத்து 416 மாணவிகள் என 37 ஆயிரத்து 637 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 93.49 சதவீத தேர்ச்சி ஆகும். தமிழக அளவில் கோவை 13-வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டில் கோவை மாவட்டம் 92.38 சதவீத தேர்ச்சி பெற்று 9-வது இடத்தை பிடித்து இருந்தது.

ஆனால் இந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருந்தாலும் தமிழக அளவில் கடந்த ஆண்டைவிட பின்தங்கி 13-வது இடத்தை பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பெண் பட்டியல்

மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக செல்போன் எண்ணுக்கு வந்ததும், அதை மாணவ-மாணவிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் காலை 11 மணியளவில் பெரும்பாலான மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் திரண்டனர். தொடர்ந்து அவர்கள் சக மாணவ-மாணவிகளை சந்தித்து தாங்கள் எடுத்து இருந்த மதிப்பெண் விவரத்தை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர். வருகிற 26-ந் தேதிதான் தற்காலிக மதிப்பெண் பட்டியல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கை நடந்தது.

இதனால் மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் தாங்கள் எடுத்த மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து அதை வைத்து தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவில் சேர்ந்தனர். இதன் காரணமாக பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் கூட்டம் அலைமோதியது.

விசாரணை நடத்த உத்தரவு

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கோவை மாவட்டம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1.02 சதவீதம் கூடுதல் தேர்ச்சி அடைந்து இருக்கிறது. இருந்தபோதிலும் தமிழக அளவில் 4 இடம் பின்தங்கிவிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறது. அடுத்த கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை இன்னும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story