சென்னை விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்
x

அபுதாபியில் இருந்து சென்னைக்கு மின் மோட்டாரில் மறைத்து கடத்திய ரூ.95 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 796 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை கண்காணித்தனர். அதில் வந்த சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரிடம் விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்

ஆனால் அதில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தபோதும் எதுவும் இல்லை. மீண்டும் அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் மின்சார மோட்டார் இருந்தது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக அந்த மோட்டார் சற்று கனமாக இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த மின்மோட்டாரை உடைத்து பார்த்தனர். அதில் தங்கத்தை உருளை போல் மாற்றி மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ.95 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 796 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக அந்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story