உழவர் சந்தைகளில் 95 டன் காய்கறிகள் விற்பனை
புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி உழவர் சந்தைகளில் 95 டன் காய்கறிகள் விற்பனையானது.
புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் வீடுகளில் பூஜை செய்தும், கோவிலுக்கு சென்றும் வழிபடுவார்கள். மேலும் காய்கறிகளால் 6 வகையான உணவு வகைகள் சமைத்து சாமிக்கு படைத்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு வழங்கி பின்னர் சாப்பிடுவார்கள். இந்த மாதத்தில் அசைவ உணவுகளை வீட்டில் சமைக்க மாட்டார்கள்.
அதன்படி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று உழவர் சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் காய்கறிகள், பூக்கள், பழங்களை வாங்கி சென்றனர்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், காகிதப்பட்டறை, காட்பாடி, குடியாத்தம் உள்ளிட்ட 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகிறது. இங்கு விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அதன்படி நேற்று ஒரேநாளில் சுமார் 95 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனையாகி உள்ளது. இதன்மூலம் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.