குமரி மாவட்டத்தில் மழை:கோழிப்போர்விளை பகுதியில் 95.4 மி.மீ. பதிவு


குமரி மாவட்டத்தில் மழை:கோழிப்போர்விளை பகுதியில் 95.4 மி.மீ. பதிவு
x

குமரி மாவட்டத்தில் பெய்த மழையையொட்டி, கோழிப்போர்விளை பகுதியில் 95.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

கன்னியாகுமரி

திருவட்டார்:

குமரி மாவட்டத்தில் பெய்த மழையையொட்டி, கோழிப்போர்விளை பகுதியில் 95.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

கொட்டித்தீர்த்த மழை

குமரி மாவட்டத்தில் கோடை வெயிலுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக மதிய நேரங்களில் மழை பெய்து வந்தது. கோடையின் உச்சமான கத்திரி வெயில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை நாகர்கோவிலில் பெய்யத் தொடங்கிய சாரல் மழை நேரம் ஆக, ஆக வேகம் அதிகரித்து மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் வரை நீடித்தது. நள்ளிரவிலும் சாரல் மழை விட்டு, விட்டு பெய்தது.

இதேபோல மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.

கோழிப்போர்விளையில் 95.4 மி.மீ. பதிவு

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோழிப்போர்விளை பகுதியில் 95.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை அணை- 35.8, பெருஞ்சாணி அணை- 9, புத்தன் அணை- 7.6, சிற்றார்-1 அணை- 21.4, சிற்றார்-2 அணை- 32.2, மாம்பழத்துறையாறு அணை- 53, முக்கடல் அணை- 28.7, பூதப்பாண்டி- 82, கன்னிமார்- 38.6, கொட்டாரம்- 30.4, மயிலாடி- 17.4, நாகர்கோவில்- 59.4, சுருளக்கோடு- 11, தக்கலை- 72.3, குளச்சல்- 4.6, இரணியல்- 28.2, பாலமோர்- 8.6, திற்பரப்பு-73, ஆரல்வாய்மொழி- 18, கோழிப்போர்விளை- 95.4, அடையாமடை- 37.2, குருந்தங்கோடு- 34, ஆனைக்கிடங்கு- 50.4 என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது.

இதனால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 380 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 71 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 20 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 32 கன அடி தண்ணீரும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 8.8 கன அடி தண்ணீரும் வருகிறது. குடிநீருக்காக பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 51 கன அடி தண்ணீரும், முக்கடல் அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

திற்பரப்பு அருவி

மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.


Next Story