திருவண்ணாமலையில் 96 மில்லி மீட்டர் மழை


திருவண்ணாமலையில் 96 மில்லி மீட்டர் மழை
x

திருவண்ணாமலையில் 96 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. தொடர் மழையின் காரணத்தினால் திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரி நிரம்பியது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 96 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. தொடர் மழையின் காரணத்தினால் திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரி நிரம்பியது.

வேங்கிக்கால் ஏரி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து அவ்வப்போது பெய்து வரும் மழையினால் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் வேங்கிக்கால் ஏரி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் வேங்கிக்கால் ஏரியும் ஒன்றாகும்.

இந்த ஏரியின் நீர் திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கிக்கால் ஊராட்சி பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் இன்று வேங்கிக்கால் ஏரி முழு கொள்ளளவையும் எட்டி உபரி நீர் வெளியேறியது. இதனை அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

திருவண்ணாமலையில் அதிகபட்சம்

நேற்று இரவிலும் திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது.

கலசபாக்கம்

கலசபாக்கம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் கலசபாக்கம் அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள மிருகண்டா அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சுமார் 5 அடி தண்ணீர் நீர்மட்டம் உயர்ந்து தற்போது 14 அடி நீர்மட்டம் உள்ளன.

கனமழையின் காரணமாக செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கலசபாக்கம் அருகே உள்ள ஆணைவாடி பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வெள்ளம் வழிந்து ஓடுகின்றன. இதனால் அவ்வழியே செல்லும் மக்கள் வேடிக்கையாக பார்த்துவிட்டு செல்கின்றனர். மேலும் கலசபாக்கம் பகுதியில் உள்ள ஏரி குளங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 96 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கலசபாக்கம் - 75.4, சேத்துப்பட்டு - 72.4, செங்கம் - 38.2, செய்யாறு மற்றும் வெம்பாக்கம் - 35, கீழ்பென்னாத்தூர் - 33.2, வந்தவாசி - 32, ஜமுனாமரத்தூர் - 20, போளூர் - 18.8, ஆரணி - 18.6, தண்டராம்பட்டு- 15.6.

பலத்த மழை

தொடர்ந்து திருவண்ணாமலையில் இன்று பகலில் வெயில் கொளுத்தியது. மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை சுமார் 5 மணியளவில் இருந்து காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் சாலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பின்னர் சிறிது நேரம் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து திருவண்ணாமலையில் பெய்து வரும் மழையினால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.


Related Tags :
Next Story