பிளஸ்-2 தேர்வில் நெல்லை மாவட்டத்தில் 96.61 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி


பிளஸ்-2 தேர்வில் நெல்லை மாவட்டத்தில் 96.61 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x

பிளஸ்-2 தேர்வில் நெல்லை மாவட்டத்தில் 96.61 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருநெல்வேலி

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 51 அரசு பள்ளிக்கூடங்கள், 59 அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் பள்ளிகள், 72 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என 182 பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்கள் 9,017 பேரும், மாணவிகள் 10,705 பேரும் ஆக மொத்தம் 19,722 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 8,576 பேரும், மாணவிகள் 10,477 பேரும் ஆக மொத்தம் 19,053 பேர் தேர்ச்சி பெற்றனர்.

வழக்கம் போல இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று இருந்தனர். மொத்தமாக 96.61 சதவீதம் பேர் பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்கள் 95.11 சதவீதமும், மாணவிகள் 97.87 சதவீதமும் பெற்றுள்ளனர்.

நெல்லை மாவட்டம் தேர்ச்சி விதத்தில் 11-வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டும் நெல்லை மாவட்டம் 11-வது இடமே பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் 3-வது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். பிளஸ்-2 தேர்வு முடிவுகளை பெரும்பாலான மாணவ- மாணவிகள் வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் பார்த்துக் கொண்டனர். ஒரு சில மாணவ-மாணவிகள் மட்டுமே பள்ளிக்கூடத்திற்கு வந்து தேர்வு முடிவுகளை பார்த்து ஆசிரியரிடம் ஆசீர்வாதம் பெற்று சென்றனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 51 அரசு பள்ளிக்கூடங்களில் 5261 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 4920 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.52 சதவீத தேர்ச்சி ஆகும். மாவட்டத்தில் உள்ள 182 பள்ளிக்கூடங்களில் 79 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. வடக்கு செழியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நெல்லை மீனாட்சிபுரம் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளி, துலுக்கர்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, பத்தமடை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஏர்வாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, முனைஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, குட்டம் அரசு மேல்நிலைப்பள்ள, கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.


Next Story