96-வது பிறந்த நாள்: சிவாஜி கணேசன் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை


96-வது பிறந்த நாள்: சிவாஜி கணேசன் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
x

நடிகர் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாளையொட்டி சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

நடிகர் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் முழுஉருவ சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில், அவரது உருவப்படம் ஒன்றும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

சிவாஜி கணேசனின் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் த.வேலு, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் டாக்டர் ரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் த.மோகன், சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு, பேரன்கள் நடிகர் விக்ரம் பிரபு, துஷ்யந்த் ராம்குமார் மற்றும் குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சிம்மக் குரலால் பேசி...

இதே போன்று நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் ராஜேஷ், மன்சூர் அலிகான், நிழல்கள் ரவி, சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் நடிகர்-நடிகைகள் சிவாஜி கணேசன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., மாநில செயலாளர் ஜி.தமிழ்செல்வன், பா.ஜ.க. மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார் உள்பட ஏராளமானோர் சிவாஜி கணேசன் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், "தலைவர் கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனங்களை அனல் பறக்க தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த நடிகர் திலகத்தின் 96-வது பிறந்தநாள். நடிப்பின் இமயமாய், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ், தரணியும், தமிழும் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story