கோவை மாவட்டத்தில் 97.57 சதவீதம் பேர் தேர்ச்சி
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கோவை மாவட்டத்தில் 97.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் மாநில அளவில் 4-ம் இடத்தை தக்க வைத்தது.
கோவை
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கோவை மாவட்டத்தில் 97.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் மாநில அளவில் 4-ம் இடத்தை தக்க வைத்தது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை 128 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் 360 பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 794 மாணவர்கள், 18 ஆயிரத்து 533 மாணவிகள் என மொத்தம் 34 ஆயிரத்து 327 பேர் எழுதினர். மேலும் 1,628 பேர் பங்கேற்கவில்லை.
இதையடுத்து தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த மாதம் 10-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி நிறைவு பெற்றது. பின்னர் இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் நடந்தது.
97.57 சதவீத தேர்ச்சி
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் கோவை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 228 மாணவர்களும், 18 ஆயிரத்து 265 மாணவிகளும் என மொத்தம் 33 ஆயிரத்து 493 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 96.42 சதவீதமும், மாணவிகள் 98.55 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். இது ஒட்டு மொத்தமாக 97.57 சதவீத தேர்ச்சி ஆகும்.
இதன் மூலம் கோவை மாவட்டம், மாநில அளவிலான தேர்ச்சி சதவீத பட்டியலில் தொடர்ந்து 3-வது ஆண்டாக 4-வது இடத்தை தக்கவைத்துக்கொண்டது. கடந்த ஆண்டு 96.91 சதவீதம் பெற்று இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.66 சதவீதம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இனிப்பு வழங்கி மகிழ்ச்சி
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இதை கணினி மற்றும் செல்போன் மூலம் இணையதளத்துக்கு சென்று மாணவ-மாணவிகள் அறிந்து கொண்டனர். மேலும் அவர்களது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாக பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
தாங்கள் தேர்ச்சி பெற்றதை அறிந்ததும், மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.