பிளஸ்-2 பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.59 சதவீதம் பேர் தேர்ச்சி


பிளஸ்-2 பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.59 சதவீதம் பேர் தேர்ச்சி
x

பிளஸ்-2 பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.59 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெரம்பலூர்

தேர்வு முடிவு வெளியானது

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் காலை 10 மணியளவில் அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிகளில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. மாணவ-மாணவிகளின் மன உளைச்சலை தடுக்கும் பொருட்டு கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து புதிய முறை கொண்டு வரப்பட்டது. அதன்படி இந்த ஆண்டும் மாணவ-மாணவிகளில் அதிக மதிப்பெண்கள் விவரம் வெளியிடப்படவில்லை. மாணவ-மாணவிகளின் மதிப்பெண் விவரம் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு இ-மெயில் மூலமாக அனுப்பப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை 79 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 745 மாணவர்களும், 3 ஆயிரத்து 646 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 391 பேர் எழுதினர். இதில் 3 ஆயிரத்து 624 மாணவர்களும், 3 ஆயிரத்து 589 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 213 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.59 சதவீத தேர்ச்சி ஆகும். தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டம் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாமிடம் பிடித்தது.

அரியலூர்

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 88 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 739 மாணவர்களும், 4 ஆயிரத்து 541 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 739 பேர் எழுதினர். இதில் 4 ஆயிரத்து 12 மாணவர்களும், 4 ஆயிரத்து 454 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 466 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96.88 சதவீத தேர்ச்சி ஆகும். அரியலூர் மாவட்டம் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் 10-ம் இடம் பிடித்தது.

செல்போனில் குறுஞ்செய்தி

மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள், அவர்களின் பெற்றோர் செல்போனில் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலம் அனுப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு அவர்களது பெற்றோர் செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவு வந்தது. இதில் அவர்களது பெயர், பாடவாரியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள், தேர்ச்சி அல்லது தோல்வி என்ற விவரம் அனுப்பப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகளை தங்களது பெற்றோர் செல்போன் மூலம் வீட்டில் இருந்தே அறிந்து கொண்டனர். மேலும் மாணவ-மாணவிகள் சிலர் தாங்கள் பயிலும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களின் செல்போன்கள் மூலம் பிளஸ்-2 தேர்வு முடிவுக்கான இணையதள முகவரிகளில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர்.


Next Story