9,762 விவசாயிகள் உதவித்தொகை பெறுவதில் சிக்கல்


9,762 விவசாயிகள் உதவித்தொகை பெறுவதில் சிக்கல்
x

நீலகிரியில் கிசான் திட்டத்தில் பதிவை புதுப்பிக்க முடியாததால், 9,762 விவசாயிகள் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரியில் கிசான் திட்டத்தில் பதிவை புதுப்பிக்க முடியாததால், 9,762 விவசாயிகள் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

உதவித்தொகை

பிரதம மந்திரியின் கிசான் திட்டம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. மாவட்டத்தில் 48 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர்.

இதற்கிடையே விவசாயிகள் தங்களது வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என கடந்தாண்டு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் தங்களது வங்கி கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைத்தனர். அவ்வாறு இணைத்தவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த மாதம் 12-வது தவணை உதவித்தொகை விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட உள்ளது.

கூட்டு பட்டா

இந்தநிலையில் தற்போது உதவித்தொகை பெற வேளாண் அலுவலகங்கள், இ-சேவை மையங்கள் கே.ஒய்.சி. இணையதளத்தில் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டையுடன் நேரடியாக வந்து கைரேகையை பதிவு செய்ய வேண்டும். மேலும் நிலம் சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நீலகிரியில் விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வேளாண் அலுவலர்கள் கூறியதாவது:-

உதவித்தொகை பெற கே.ஒய்.சி. இணையதளத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். நீலகிரியில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் 48,307 விவசாயிகள் உள்ளனர். இதுவரை 38,545 பேர் பதிவை புதுப்பித்து உள்ளனர். கூட்டு பட்டா இருப்பவர்களால், பதிவை புதுப்பிக்க முடிவதில்லை. கூட்டு பட்டாவில் 5 பேர் இருந்தால், முதல் நபர் மட்டுமே பதிவு செய்ய முடிகிறது. மற்ற விவசாயிகள் தற்காலிகமாக நிராகரிக்கப்படுகின்றனர். இதனால் 9,762 விவசாயிகள் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

கால அவகாசம்

நீலகிரி மாவட்டத்தில் கூட்டு பட்டா உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் மீண்டும் பதிவு புதுப்பிக்கப்பட்டால், அவர்களது பெயர் பட்டியலில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். எனவே, விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டு பட்டாவை உட்பிரிவு (சப் -டிவிஷன்) செய்யும் பணிகளை வருவாய்த்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும். மேலும் கூடுதலாக கால அவகாசம் வழங்கி, சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்


Next Story