மோர்தானா அணையில் இருந்து 989 கன அடி நீர் வெளியேற்றம்


மோர்தானா அணையில் இருந்து 989 கன அடி நீர் வெளியேற்றம்
x

தொடர் மழை காரணமாக குடியாத்தம் மோர்தானா அணையில் இருந்து 989 கன அடிநீர் வெளியேறி வருகிறது.

வேலூர்

தொடர் மழை காரணமாக குடியாத்தம் மோர்தானா அணையில் இருந்து 989 கன அடிநீர் வெளியேறி வருகிறது.

நீர்மட்டம் உயர்வு

குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெய்த தொடர் மழையால் நிரம்பி வழிந்தது. தொடர்ந்து பல மாதங்களாக அணை நிரம்பி இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மோர்தானா அணை பகுதியில் பலத்த மழை பெய்தது. அதனால் அணையில் இருந்து 163 கனஅடி தண்ணீர் வழிந்தோடியது.

நேற்று முன்தினம் இரவு மோர்தானா அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி, புங்கனூர், பலமநேர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 7 சென்டி மீட்டர் அதிகரித்து அணையின் நீர்மட்டம் 11.57 மீட்டராக உயர்ந்தது. நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி வினாடிக்கு 579 கனஅடி தண்ணீர் வழிந்தோடியது.

வெளியேற்றம்

மாலையில் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து 4 மணி அளவில் 989 கன அடி தண்ணீர் வழிந்து ஓடியது. நேரம் செல்லச் செல்ல அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டே இருந்தது. அந்த தண்ணீர் அப்படியே அணையில் இருந்து வெளியேறியது.

அதிக அளவு தண்ணீர் வழிந்தோடுவதை அறிந்த சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் வருவாய் துறையினரும், நீர்வளத் துறையினரும் 24 மணி நேரமும் மோர்தானா அணையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதிகாரிகள் கண்காணிப்பு

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் வருவாய்த் துறையினர் மோர்தானா அணை நீர் செல்லும் கவுண்டன்யா மகாநதி கரைப்பகுதியில் கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் தாலுகா போலீசார் மோர்தானா அணை வெள்ளநீர் செல்லும் கவுண்டன்ய மகாநதி ஆறு செல்லும் கிராமப் பகுதிகளில் ரோந்து சென்று வருகின்றனர்.

குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு உத்தரவு பேரில் நகராட்சி ஊழியர்கள் குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் செல்லும் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் கரை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.


Next Story